யூதாவின் அரசர்களாகிய யோவாத்தான், ஆக்காஸ், எசேக்கியாஸ் ஆகியவர்களின் காலத்தில் மோரெஷூத் ஊராராகிய மிக்கேயாசுக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு: அவர் சமாரியாவையும் யெருசலேமையும் குறித்துக் கண்ட காட்சி இதுவே:
நெருப்பின் முன்னால் வைக்கப்பட்ட மெழுகு போலவும், பாதாளத்தில் பாய்ந்தோடும் வெள்ளம் போலவும் அவர் காலடியில் மலைகள் கரைந்து போகும், பள்ளத்தாக்குகள் பிளந்து போகும்.
ஆகையால் சமாரியாவைப் பாழடைந்த மண்மேடாகவும், திராட்சைத் தோட்டங்கள் வைக்கும் இடமாகவும் செய்வோம்; அதன் கற்களைப் பள்ளத்தாக்குகளில் உருட்டி விடுவோம், அதன் அடிப்படைகளை வெளியில் வாரி எறிவோம்.
அதன் படிமங்கள் யாவும் துகள் துகளாக்கப்படும், வருமானங்கள் எல்லாம் நெருப்பினால் எரிக்கப்படும்; அதன் சிலைகளை எல்லாம் நாம் நொறுக்கிப் போடுவோம். ஏனெனில் விலைமகளுக்குரிய பணயமாய் அவை சேர்க்கப்பட்டவை, விலைமகளுக்குரிய பணயமாகவே அவை போய்விடும்.
உங்கள் செல்லப் பிள்ளைகளைக் குறித்து, உங்கள் தலை மயிரை வெட்டி மழித்துக் கொள்ளுங்கள்; கழுகைப் போல முற்றிலும் மழித்துக் கொள்ளுங்கள், ஏனெனில் அவர்கள் உன்னிடமிருந்து நாடு கடத்தப்படுவார்.